நக்சல்களுடன் தொடர்பு பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நக்சல்களுடன் தொடர்பு வைத்திருந்த வழக்கில், டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்யும்படி மும்பை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நக்சல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 6 பேருக்கு மகாராஷ்டிரா கட்சிரோலி நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, சட்ட விரோத தடை சட்டத்தின் கீழ் சாய்பாபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவர்களை விடுதலை செய்யும்படி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. 8 ஆண்டுக்குப் பின் சிறையிலிருந்து சாய்பாபா வெளிவருவதை பல அரசியல் கட்சிகள் வரவேற்றன. இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விடுமுறை நாளான நேற்று, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பேலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாய்பாபா தரப்பு வக்கீல் பசந்த், ‘‘சாய்பாபா 95 சதவீதம் ஊனமுற்றவர். எனவே, அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். எந்த நிபந்தனைக்கும் கட்டுப்பட தயார். வீட்டு காவலில் இருக்கவும் தயார்,’’ என்றார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இப்போதெல்லாம் நகர்ப்புற நக்சல்கள் வீட்டு காவலை நாடும் போக்கு உள்ளது. வீட்டிலிருந்து எல்லாவற்றையும் செய்ய முடியும். எனவே, வீட்டு காவல் அவர்களின் விருப்பமாக உள்ளது,’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான ஆய்வு தேவை என்று கூறி, சாய்பாபாவை விடுவிக்க உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.