உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் யோகா குரு ராம்தேவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நடிகர் சல்மான் கான் போதைப்பொருள் எடுத்துக்கொள்கிறார். நடிகர் அமீர் கான் குறித்து எனக்குத் தெரியாது. ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக சிறைக்கும் சென்று வந்திருக்கிறார். நடிகைகள் போதைப்பொருள் பயன்படுதுகிறார்களா என்பது குறித்து கடவுளுக்குத்தான் தெரியும்.

சினிமா துறையில் அனைத்து மட்டத்திலும் போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது. அரசியலிலும் போதைப்பொருள் இருக்கிறது. தேர்தலின்போது மது வகைகள் இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்றன. அனைத்து வகையான போதைப்பொருள் பழக்கத்திலிருந்தும் இந்தியா விடுபடவேண்டும் என்று நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இதற்காக நாங்கள் ஒரு இயக்கத்தை தொடங்கப்போகிறோம்” என்று தெரிவித்தார். ராம் தெரிவித்த இந்தக் கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாபா ராம் தேவ் ஆரம்பத்தில் யோகா மட்டும் கற்றுக்கொடுத்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுதும் பற்பசை, வீட்டு விபயோகப்பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ஆரம்பித்தார். சமீபத்தில் சமையல் எண்ணெய் கம்பெனியை விலைக்கு சமையல் எண்ணெய் வியாபாரமும் செய்ய ஆரம்பித்திருக்கிறார். பாபா ராம் தேவ் தனது பொருள்களை விற்பனை செய்ய நாட்டின் முக்கிய இடங்களில் கடைகளையும் திறந்துள்ளார் . இந்த நிலையில், “இப்போது யோகாவிற்கு இரண்டாவது இடம் கொடுத்துவிட்டு முழு நேர வியாபாரியாக பாபா ராம்தேவ் மாறியிருக்கிறார்” எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.