சமீப காலமாக வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிக்கள், நியூமராலஜி மற்றும் வேறு சில காரணங்களுக்காக தங்கள் வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் வாங்குகின்றனர். இதற்காக, 2 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்துகின்றனர்.
தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான 100 வாகன எண்களை சிறப்பு எண்களாக ஒதுக்கியுள்ளது. இந்த எண்களை ஆர்.டி.ஓ-க்கள் மூலம் பெற முடியாது. ஆனால், 80 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், டி.என் மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி, ஃபேன்சி நம்பர் கட்டணத்தை 2 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால், விரைவில் ஃபேன்சி நம்பர்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, முதல் 4 தொடர்களுக்கு ஃபேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனிமேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும். 5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது. 11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்கிறது.