ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு வர முயன்ற இலங்கை தமிழர்கள் 6 பேரை, படகோட்டிகள், தனுஷ்கோடி கடலில் முதலாம் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர். இரவு முழுவதும் மணல் திட்டில் தவித்த அவர்களை பார்த்த தனுஷ்கோடி மீனவர்கள், ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாமில் இருந்து நேற்று அதிகாலை ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலில் சென்ற படையினர், மணல் திட்டில் தவித்த 3 பெண்கள் உட்பட 6 பேரையும் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து, மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். முழுமையான விசாரணைக்கு பின்னர் 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.