கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஆவத்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். உடன் பணிபுரிந்து வரும் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன்(32) என்பவருடன், ராஜேந்திரனுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து, 2 பேரும், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, தமிழ் கலாச்சாரத்தின்படி திருமணம் செய்ய பெண் வீட்டார் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காவேரிப்பட்டணம் கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில், ராஜேந்திரன்-சியாங் ஷியா ஜோன் ஆகியோரது திருமணம் நடந்தது. விழாவில் தைவான் நாட்டில் இருந்து மணமகளின் உறவினர்கள், தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை, புடவை அணிந்து கலந்து கொண்டனர்.