டெல்லி: அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வாழும் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு மைய அரசின் நிதி ஆதாரத்துடன் மாநில அரசின் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
(1) குடிசைப் பகுதிகளில் கள மேம்பாடு (ISSR),
(2) மானியத்துடன் கூடிய கடன் (CLSS),
(3) பங்களிப்புடன் கூடிய வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் (AHP),
(4) பயனாளிகளால் தாமாக தனி வீடுகள் கட்டுதல் (BLC).
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதித் (நகர்ப்புறம்) திட்டத்தினை செயல்படுத்தும் முகமை நிறுவனமாகும்.
தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இத்திட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாகவும், பயனாளிகள் தாமாக தனி வீடுகள் கட்டும் திட்டம் (BLC) பேரூராட்சிகளில், பேரூராட்சிகளின் இயக்குநகரத்தின் மூலமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அரசாணை எண். (Ms) எண். 126, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள். 8.10.2015 மூலம் இத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க அரசு தலைமை செயலர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு அமைத்தது. ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு 560373 வீடுகளுக்கு/ அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 79 திட்டப்பகுதியில் முன்மாதிரி திட்டம் உட்பட 33651 குடியிருப்புகள் பங்களிப்புடன் கூடிய வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு 93097 குடியிருப்புகள் முன்னேற்றத்தில் உள்ளன. மற்றும் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 264329 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 104071 வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன. மீதமுள்ள 65225 குடியிருப்புகள் / வீடுகள் மார்ச் 2023 க்குள் முடிவுறும்.
ஒன்றிய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தரமான வீடுகளை அவர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு அருகிலேயே கட்டுவதற்கு திறனுக்கேற்ற வாடகை குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை அறிவித்தது. இதுவரை தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 54,385 குடியிருப்புகளை 6 திட்டப்பகுதிகளில் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்ட 6 திட்டங்களில் இதுவரை 3 திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரவை அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உலகளாவிய வீட்டு வசதி தொழில் நுட்ப சவாலை (Global Housing Technology Challenge) தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் இருந்து நிலையான மற்றும் பேரழிவு தாங்கக் கூடிய புதுமையான தொழில் நுட்பங்களின் ஒரு முறையினை அடையாளம் கண்டு, உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்ப சவால் திட்டம் மற்றும் முன் மாதிரியான வீட்டு வசதி திட்டத்தின் (Light House Project) கீழ் இப்பகுதியின் புவிகால நிலைமற்றும் அபாயகரமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் தொழில்நுட்பத்துடன் தரமான கட்டுமானம், மாறுபட்ட தட்ப்வெப்பநிலைகளை எதிர்கொள்வது, சுற்றுசூழலுக்கு உகந்த நீடித்த வல்லமையோடு, குறைவான காலநேரத்தில், குறைவான செலவினத்தில் குடியிருப்புகளை கட்டும் திட்டமாகும். இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட ஆறு நகரங்களில் இத்திட்டம் தமிழ்நாட்டில் சென்னையில் செயல்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முதலாக முன் மாதிரியான வீட்டு வசதி திட்டத்தின் மூலம் (Light House Project) குடியிருப்புகள் கட்டப்பட்டு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 26.5.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. நவீனமான தொழில்நுட்ப முறையை சிறப்பாக பயன்படுத்த, அலுமினியம் படிவம் கட்டுமானம் (Mivan Technology) மூலம் 30 திட்டப்பகுதிகளில் 23,954 குடியிருப்புகள் கட்டும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுமையான தொழில்நுட்பத்தின் ஒரு முறையான கட்டுருவாக்க தொழில்நுட்பம் மூலம் (Pre fab Technology) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஏற்கனவே மூன்று திட்டப்பகுதிகளில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2092 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரவை, பாரதப்பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் – 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த விருதுகள், திட்டத்தினை செயல்படுத்தும் முகமைகளுக்கு இடையே போட்டி சூழலை ஏற்படுத்தவும் விரைவாக பணியை முடிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த விருதுகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. மாநிலம், மாநகராட்சி, நகராட்சி சபை மற்றும் நகர் பஞ்சாயத்து விருதுகள்.
2. சிறப்பு பிரிவு விருதுகள்
3. பயனாளிகளுக்கான விருதுகள். ஜீன் 2021 முதல் நவம்பர் 2021 வரை உள்ள 150 நாட்களில் மாநிலங்களில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சவால்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கண்ட விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3வது இடத்தை பெற்றுள்ளது. இது தவிர தமிழகம் பல்வேறு பிரிவுகளில் கீழ்கண்ட விருதுகளை வென்றுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான சிறப்பு பிரிவு விருதுகள்.
* திறனுக்கேற்ற வாடகை வீட்டு வசதி குடியிருப்புகள் மாதிரி 2 ன் கீழ் விரைவாக வீடுகள் கட்ட சிறப்பு அங்கீகாரம்.
* நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் சிறந்த மாநிலம்.
நகராட்சி விருதுகள்
* சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடம்.
* சிறப்பாக செயல்பட்ட பேரூராட்சிகளில் பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5வது இடம்.
மேற்கூறிய விருதுகள் குஜராத் மாநிலம் இராஜ்கோட்டில் 19.10.2022 முதல் 21. 10.2022 வரை நடைபெறும் இந்திய நகர்ப்புற வீட்டு வசதி மாநாட்டில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 19.10.2022 அன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.