பர்ஸில் இருக்கும் பணமோ, சேர்த்து வைத்திருக்கும் பட்டங்களோ பதவிகளோ ஒரு மனிதனின் குணத்தைத் தீர்மானிக்காது. அந்த மனிதன் தன்னுடைய சக மனிதனை, தன்னைவிட நலிவடைந்த மனிதனை எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பொறுத்தே, அவனின் குணம் தீர்மானிக்கப்படும்.

எனவே பிற மனிதர்களிடம் தன்மையாக நடந்து கொள்வது முக்கியம். ஆனால் பெரும்பாலான கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் குரலில் ஒருவித அதிகார தொனி ஒலிக்கும். செய்யும் வேலைக்காக அதைப் பொறுத்துக் கொண்டு, அவர்களுக்கான சேவையை அங்கு வேலை செய்பவர்கள் வழங்குவதுண்டு.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சாய் கஃபே (chai cafe) ஒன்று, சமீபத்தில் வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு வேலை செய்பவர்களுடன் தன்மையாக நடந்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுக்கான டீ விலை குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
29 வயதான உஸ்மான் ஹுசைன், இந்தாண்டு மார்ச் மாதம் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கடையில், தேநீர், டெசர்ட், ஸ்ட்ரீட் புஃட் போன்றவை விற்கப்படுகின்றன. அவரன் கடையில் தன் வாடிக்கையாளர்களுக்காக அறிவிப்பு ஒன்றை அவர் வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் எவ்வளவு மரியாதையாக ஆர்டர் செய்கிறார்களோ அந்த அளவிற்கு ஒரே டீயின் விலை வெவ்வேறு கட்டணத்தில் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு, இந்த நோட்டீஸ் சாய் ஸ்டாப்பின் ஃபேஸ்புக் பக்கத்திலும் சனிக்கிழமையன்று பதிவிடப்பட்டது. அதில் “Desi Chai’’ என்றால் 5 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படும். அதுவே “Desi Chai Please’’ என்றால் 3 பவுண்டுகள் பெறப்படும். இன்னும் “Hello Desi Chai Please’’ என்றால், 1.90 பவுண்டுகள் தான் ஆகும் என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இணையத்தில் இந்தப் பதிவு வைரலாகி வருவதைத் தொடர்ந்து, ஹுசைன் கூறுகையில், “ சில நேரங்களில் நம்முடைய நடத்தை குறித்து நினைவூட்டுவது தேவை என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் முரட்டுத்தனமான வாடிக்கையாளர்களுடன் ஒருபோதும் போராடியதில்லை.
என்னைப் பொறுத்தவரை என் கடையின் உள்ளே வருபவர்களை, வீட்டில் வரவேற்கும், ஒரு விருந்தினரைப் போல் நடத்த வேண்டும். அப்படி ஒரு மரியாதையைப் பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
தன்னோட கடையில வேலை பாக்குறவங்களும் மதிக்கப்படணும்னு நெனைக்குற அந்த மனசு இருக்கே,… அதான் சார் கடவுள்..!