மும்பை சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை திரும்ப பெற்ற பாஜக – என்ன காரணம் தெரியுமா?!

மும்பையில் அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷ் காலமானதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வேட்பு மனுத்தாக்கல் ஏற்கனவே முடிந்திருந்தது. இன்று வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வரும் 3-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. சிவசேனா சார்பாக ரமேஷ் மனைவி ருதுஜாவும், பாஜக சார்பாக முர்ஜி பட்டேலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ருதுஜாவை வேட்பாளராக நிறுத்தவிடாமல் தடுக்க பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேயும் முயற்சி செய்து பார்த்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலனலிக்கவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸுக்கு கடிதம் மூலம் பாஜக வேட்பாளரை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதோடு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ் ஆகியோரை ராஜ்தாக்கரே நேரிலும் சந்தித்து இது தொடர்பாக பேசினார். இது தவிர தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பாஜக தனது வேட்பாளரை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் இதேகோரிக்கையை விடுத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தேவேந்திர பட்னவிஸ் `இவ்விவகாரத்தில் தான் தனித்து முடிவு எடுக்கமுடியாது என்றும், கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக தனது வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் ஏற்கனவே ருதுஜாவிற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதோடு இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டால் அது வரும் மாநகராட்சி தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்தே பாஜக தனது வேட்பாளரை திரும்ப பெற்று இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு இத்தேர்தல் மூலம் உத்தவ் தாக்கரே கட்சியின் சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாகவும் பாஜக இம்முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜக தனது வேட்பாளரை திரும்ப பெற்று இருப்பதால் ருதுஜாவின் வெற்றி எளிதாகி இருக்கிறது.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.