தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றுமாறு கடிதம் அளித்துள்ளார். கடந்த காலங்களில் கட்சிகளில் பிளவு ஏற்பட்டபோது நடந்தது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஜானகி – ஜெயலலிதா அணிகள் உருவாகின. 1988 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியை ஏற்ற ஜானகி ராமச்சந்திரன், 23 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அந்தக் காலகட்டத்தில், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களை பேரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் அப்போதைய சபாநாயகர் பி. ஹெச். பாண்டியன்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஜெயலலிதா அணியினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் பி.ஹெச். பாண்டியன். அதன்பிறகு பேரவைக்குள் வன்முறைகள் நிகழ்ந்தன. 1989 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஜானகி – ஜெயலலிதா அணியினர் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி கண்டனர். ஜெயலலிதாவை எதிர்கட்சித் தலைவராக ஆனதைத் தொடர்ந்து, அதிமுக என்ற கட்சியை அவரிடமே அளித்தார் ஜானகி ராமசந்திரன்.
இதன் பிறகு, ஜானகி அணியில் இரட்டைப் புறா சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பி. ஹெச். பாண்டியனை அதிமுக உறுப்பினராகவே கருத வேண்டுமென, ஜெயலலிதா அளித்த கடிதத்தை அப்போதைய சபாநாயகர் தமிழ்குடிமகன் ஏற்கவில்லை. பி. ஹெச். பாண்டியனுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இரட்டைப் புறா சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால், தன்னை அவர் அதிமுகவாகவே கருதவில்லை.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஓபன்னீர்செல்வம் அணி தனியாக செயல்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அளித்த கடிதங்களை அப்போதைய சபாநாயகர் தனபால் கடைசி வரை ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு, சசிகலா – தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய பிறகு ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழுக் கூட்டங்கள் குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமிக்குமாறு, சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடிதம் அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்துள்ள ஓ. பன்னீர்செல்வம், இந்த விவகாரத்தில் தன்னிடம் கருத்து கேட்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று
கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், சபாநாயகர் எடுக்கும் முடிவு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
