அதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்த சட்டவிதியை பாதுகாக்கவே போராடுகிறோம் – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: எம்ஜிஆர் கொண்டுவந்த அதிமுக சட்ட விதிகளைப் பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில்பங்கேற்றபின், செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது, ‘‘சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது குறித்தும், பங்கேற்பது குறித்தும் சட்டப்பேரவை தலைவர் தகவல் அளித்தார். அதன்அடிப்படையில் அதிமுக சார்பில் எங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக பேரவைக்கு வந்தோம். ஏற்கெனவே பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சட்டப்பேரவை தலைவரை சந்தித்தோம். அலுவல் ஆய்வுக்குழுவில் இயற்றப்படும் தீர்மானத்தை முழுமையாக ஏற்போம்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில், இரு அணிகளாக பிரிந்து செயல்படுகிறீர்கள். கட்சியின் வளர்ச்சிக்கு இது சரியானதா?

எம்ஜிஆர், தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுகவை உருவாக்கி, 3 முறை முதல்வராக இருந்து நல்ல பல திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அவர் மறைவுக்குப்பின் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இந்த இயக்கத்துக்கு வலு சேர்த்தார். மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை மக்கள் நலன் கருதி வழங்கி, முன்னோடி முதல்வராகப் பணியாற்றினார். இருபெரும் தலைவர்களும் அதிமுகவுக்கு பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர். இந்த இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்தனர்.

எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளை, ஜெயலலிதாவும் அடிபிறழாமல் கட்டிக் காத்தார். இந்த விதிகளை எந்தவித மாசுபாடும் இல்லாமல் காப்பாற்றும் பொறுப்பில் நாங்கள் உள்ளோம். எவ்வளவு பிரச்சினைகள், அச்சுறுத்தல் வந்தாலும், அதை கட்டிக் காப்பாற்றும் சிப்பாய்களாக ஒன்றரை கோடி தொண்டர்களும் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். எம்ஜிஆரைப் பொறுத்தவரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அடித்தளம். தொண்டர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தையும் அவர்அளித்துள்ளார். சாதாரண தொண்டன்கூட இயக்கத்தின் மிக உயரிய பொறுப்புக்கு வரமுடியும் என்று விதிகளை வகுத்து தந்துள்ளார்.

இப்போது சட்டவிதிகள் மாற்றப்படும் அபாயகரமான சூழல் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா எண்ணங்களுக்கு மாறாக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வர 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய, வழிமொழிய வேண்டும், அந்த பொறுப்புக்கு வருபவர்கள் 5 ஆண்டுகள் தலைமைக்கழக உறுப்பினர்களாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிகளானது எம்ஜிஆர் ஆத்மாவில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும். இதை எதிர்த்தும், எம்ஜிஆர் கொண்டுவந்த விதியின் படிதான் கட்சி நடைபெற வேண்டும் என்ற கொள்கையிலும் உறுதியாக போராடி வருகிறோம்.

சட்டப்பேரவையே உங்களை அங்கீகரித்துள்ளதே?

சட்டப்பேரவையே எங்களை அங்கீகரித்துள்ளது என்று கூறியுள்ளீர்கள். இதை பாசிட்டிவ்வான முடிவாகத்தான் அனைவரும் கருதுகிறார்கள்.

நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று கூறுகிறீர்களா?

கழகம் இணைந்தால்தான் நல்லது என்று பலமுறை கூறிவிட்டோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் உடன் இருந்தவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.