'என்னை விமர்சித்தால் செருப்பால் அடிப்பேன்..!' – பவன் கல்யாண் எச்சரிக்கை!

இனிமேல் யாரேனும் விமர்சித்தால் செருப்பால் அடிப்பேன் என ஆளுங்கட்சியினருக்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில வாரங்களாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது திடீரென்று தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை உயர்த்தி காட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு மற்ற கட்சிகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பேக்கேஜ் அடிப்படையில் கட்சி நடத்துகிறேன் என்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்.

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குண்டர்களே என்னுடைய பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள் என்றும் மேலும் பல்வேறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை எச்சரிக்கும் வகையில் பவன் கல்யாண் ஆவேசமாக பேசினார்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது செருப்பை கையில் எடுத்து கொண்டு மற்றொரு அரசியல் கட்சியை குறிப்பிட்டு அக்கட்சியினரை செருப்பால் அடிப்பேன் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.