கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெறுமா? பொதுப் பட்டியலில் தொடருமா?

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்த நிலையில் தமிழக அரசும், மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி, நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனவும், கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 7 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசும், மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “அரசியல் சட்டம், ஆரம்பத்தில் கல்வி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே விட்டிருந்தது. கடந்த 1975 முதல் 1977ஆம் ஆண்டு வரை, 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், சர்தார் ஸ்வரண் சிங் குழு அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் முறையான எந்த விவாதமும் நடத்தாமல், கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது.

இதனால் கல்வி குறித்த சட்டங்கள் இயற்றும்போது மாநில சட்டமன்றங்களை விட நாடாளுமன்றம் அதிக அதிகாரம் வாய்ந்ததாகி விடுகிறது. தற்போது தேசிய கல்விக் கொள்கை மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையில் தலையிடுகிறது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா என்பது பல மாநிலங்கள் அடங்கிய தேசம். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற தத்துவம் கொண்டு வர முடியாது. நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதும் பொருத்தமற்றது. கல்வி கடைக்கோடி வரை சென்றடைவதை மாநில அரசுகள் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே கல்வியை இன்னும் பொதுப் பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுடன் பல்வேறு சமூக – கலாசாரங்களை கொண்ட இந்தியாவில், கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் பங்களிப்பு வழங்க வேண்டும். மனித வளர்ச்சிக்கு முதன்மையான கல்விக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை. மாறாக, பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே உதவியுள்ளது.

இந்த அரசியல் சட்ட திருத்தம், கல்வியின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வகை செய்துள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து விடுவதாக கூறுவது தவறு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.