சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை.
2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை; ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன.
ஜெயலலிதா இறந்த நாள் மற்றும் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். ஆனால், 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4-ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.