உத்தமபாளையம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி இன்று காலை அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சண்முகா நதி அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் 52.5 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை, மேல்மணலாறு, கீழ்மணலாறு, இரவ்ங்களாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.
இந்நிலையில் கடந்த 3 தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ராயப்பன்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணை நிரம்பியது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 117 கன அடியாக இருந்தது. அணை நிரம்பியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணை நிரம்பியதையடுத்து நாகையகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி, ஈரசை, சீப்பாலக்கோட்டை ஓடைப்பட்டி,
உள்ளிட்ட பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டால், இப்பகுதியில் உள்ள பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதுடன், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பும். எனவே பாசனத்திற்கு உடனடியாக தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.