தொடர்ந்து நாய்களால் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் காசியாபாத் பகுதியில் அதிகரித்து வருகின்றன. அக்டோபர் 12 -ம் தேதி, பிட்புல் வகை நாயால் 11 வயது சிறுமி தாக்கப்பட்டார். செப்டம்பர் மாதத்தில் 10 வயது சிறுவன் நாயால் கடிக்கப்பட்டு 150 தையல்கள் வரை போடும் நிலை உண்டானது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் வசிப்பவர்கள் பிட்புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ போன்ற மூன்று வகையான நாயினங்களை வளர்க்கத் தடைவிதித்துள்ளது, காசியாபாத் முனிசிபல் கார்பரேஷன் ( Ghaziabad Municipal Corporation).
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், “பிட்புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ (Pitbull, Rottweiler, Dogo Argentino) போன்ற மூன்று வகையான நாயினங்களை வளர்க்க காசியாபாத் பகுதி மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த மூன்று நாயினங்களை வளர்த்து வருபவர்களாயின், அவற்றைச் சீராகப் பராமரித்து, தடுப்பூசிகள் செலுத்தி, இரண்டு மாதங்களுக்குள் குடிமை அமைப்புகளிடம் பதிவு செய்திருக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இவற்றை நாயின் உரிமையாளர்கள் செய்யத் தவறும்பட்சத்தில், அவர்கள் நாயை வேறோர் இடத்தில் கொடுத்துவிட வேண்டும் அல்லது விற்றுவிட வேண்டும்.

அதோடு புதிதாக இத்தகைய நாயினங்களை வாங்கவும் முடியாது எனத் துணை தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி அனுஜ் சிங் தெரிவித்துள்ளார். ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் அதிகபட்சமாக இரண்டு வளர்ப்பு பிராணிகளை வளர்க்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். பொது பூங்காக்கள் மற்றும் மின்தூக்கிகளில் நாயைக் கூட்டிச் செல்லும்போது வாயை மூடிவிடும் கவசத்தை (muzzle) அணிவித்துக் கூட்டிவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாய் இனங்களை வைத்திருப்பவராயின், இவை ஆறு மாத வயதை அடையும் போது, அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
காசியாபாத் முனிசிபல் கார்பரேஷனின் இந்த அறிவிப்பு முற்றிலும் தவறானது. எந்தவொரு விலங்கும் பிறக்கும்போதே ஆக்ரோஷமாகப் பிறப்பதில்லை. அவை சமூகத்தை எதிர்கொள்ளும் விதத்திலேயே அந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றன என விலங்குநல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.