புதுச்சேரி: தமிழ்வழியில் மருத்துவக்கல்வி ஏற்படுத்தப்படும் – துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்தப்படும் என்றும் மருத்துவப்பாட நூல்களை தமிழில் அச்சடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்…
தாய் தந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றார்கள். ஆனால், வளர்ந்த பின்பு பொற்றோர்களின் பேச்சை கேட்கக்கூட பிள்ளைகள் ஒரு சில துளி நேரத்தை கூட ஒதுக்குவதில்லை. இது வேதனையாக உள்ளது.
image
எனது தாய் தந்தைக்கு மரியாதை கொடுக்கின்றேன், மாற்றுக் கட்சியில் இருந்த என் தந்தையை மதித்து நடக்கின்றேன். சமீபத்தில் தமிழக அரசு எனது தந்தைக்கு வீடு ஒதுக்கியதை வைத்து என்னை விமர்சனம் செய்தார்கள். தந்தையை பாதுகாக்கவில்லை என விமர்சனம் செய்தார்கள். இதுபோன்ற விமர்சனங்களை நான் எப்போதும் பெரிதுபடுத்துவதில்லை.
எனக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என அவர் வேறு முடிவெடுத்தார். இருப்பினும் மருத்துவர் கண்காணிப்பில் தற்போது பாதுகாப்பாக வைத்துள்ளேன். தாய் தந்தைக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு விதிகளை கடந்து நான் ஆளுநராக பதவி ஏற்றவுடன் மேடையின் கீழ் இருந்த தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு தான் மற்றவர்களிடம் வாழ்த்து பெற்றேன்.
ஆகவே முதியோர்களை போற்ற வேண்டும், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முதியோர்களை அவமதிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் முதுமை எல்லோருக்கும் வரக்கூடியது தான் என்று பேசினார்.
image
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்… புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவப்படிப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம். இதற்காக மருத்துவப்படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பால்வரத்து குறைந்ததால் புதுச்சேரியில் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதை சரிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் தனது தந்தையை தெலுங்கானாவில் தன்னுடைய பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வைத்துள்ளேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.