போபால்: நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவ படிப்பு இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் எம்பிபிஎஸ் படிப்புக்கான புத்தகங்களை இந்தி மொழியில் வெளியிட்டார்.
அப்போது, நோயாளிகளுக்கு வழங்கும் பரிந்துரை சீட்டில் மருந்துகளின் பெயரை இந்தியில் எழுதலாம் என அரசு மருத்துவமனை மருத்துவர்களை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார். இதுபோல, பரிந்துரை சீட்டின் தொடக்கத்தில் Rx (சாப்பிட வேண்டிய மருந்து) என எழுதுவதற்கு பதில் ‘ஸ்ரீ ஹரி’ என எழுதலாம் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார்.
இந்நிலையில், ம.பி.யின் சத்னா நகரைச் சேர்ந்த மருத்துவர் சர்வேஷ் சிங் முதலமைச்சரின் அறிவுரைப்படி, நேற்று முன்தினமே தனது நோயாளிக்கு வழங்கிய பரிந்துரை சீட்டில் ‘ஸ்ரீ ஹரி’ என எழுதிவிட்டு, நோயாளியின் பிரச்சினைகள், அதைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகளின் பெயரை இந்தி மொழியில் எழுதி உள்ளார். இந்த மருந்து சீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது அம்மாநிலம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.