வேலையிலிருந்த பெற்றோர்; ஏழு மாதக் குழந்தையைக் கடித்துக் குதறிய தெரு நாய்! – டெல்லியில் அதிர்ச்சி

டெல்லி மற்றும் அதையொட்டிய நொய்டாவில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நாய்கள் கடித்து பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய் கடித்து வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டார். இதனால் உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் வீட்டில் ஒரு நாய்க்கு மேல் வளர்க்கக் கூடாது என்று உத்தரவே பிறப்பித்துவிட்டனர். அதோடு சில வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருப்பதால் அவற்றை வீட்டில் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் தெரு நாய் கடித்து ஏழு மாதக் குழந்தை இறந்துவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

நொய்டாவில் செக்டர் 100-ல் இருக்கும் லோட்டஸ் அபார்ட்மென்ட்டில் கட்டுமானப் பணி நடந்துவந்தது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெற்றோர் தங்கள் ஏழு மாத குழந்தையைக் கட்டட வளாகத்திலுள்ள ஓர் அறையில் தூங்க வைத்திருந்தனர். அந்நேரம் அங்கு வந்த தெரு நாய் ஒன்று குழந்தையைக் கடித்துக் குதறியது. இதில் குழந்தையின் குடல் வெளியில் வந்துவிட்டது. படுகாயமடைந்த குழந்தையை அதன் பெற்றோர் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் குழந்தை சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனது. இதனால் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ரஜ்னீஸ் வர்மா கூறுகையில், “குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வேலை செய்துகொண்டிருந்தபோது தெரு நாய் வந்து கடித்திருக்கிறது” என்று தெரிவித்தார். இது குறித்து சம்பவம் நடந்த கட்டடத்தில் வசிக்கும் ராஜ்குமார் என்பவர் கூறுகையில், “தெரு நாய் கடிப்பது இது முதன்முறையல்ல. அடிக்கடி இது போன்று நடக்கிறது. ஆனால் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. அதோடு அனைத்து நாய்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நொய்டா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.