கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு 5,000 பேர் படகுகள் மூலம் மீட்பு

கொள்ளிடம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி முக்கொம்புக்கு 2.01 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து காவிரியில் 64,523 கன அடியும், கொள்ளிடத்தில் 1,36,939 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த இரண்டு ஆறுகளிலும் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில், இந்த வருடம் ஐந்தாவது முறையாக உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதால், அனைத்து உபரி நீரும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி வழியாக சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்க கடலில் கலந்து வருகிறது.

இந்த வருடம் நேற்றுவரை 320 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று வங்கக்கடலில் கலந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 90 டிஎம்சி. இதோடு ஒப்பிடுகையில் மூன்றரை மடங்கு தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மயிலாடுதுறை மாவட்டம் கரையோரம் உள்ள நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், மேலவாடி, சந்த படுகை, காட்டூர், அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகு மூலம் மீட்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி திருவானைக்காவல் அருகே கொள்ளிடக்கரையில் மண்அரிப்பால் கோயில் சுவர், சுவாமி சிலை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. லால்குடியில் கரையில் மண் சரிவு ஏற்பட்டது. அதேபோல், ரங்கம் கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே அழகிரிபுரத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள கருப்பண்ணசாமி கோயிலின் சுற்றுச்சுவர் வெள்ளத்தால் மண்ணரிப்பு ஏற்பட்டு இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கோயிலின் உட்புறம் சுற்றுச்சுவர் அருகில் இருந்த மதுரை வீரன் சிலையும் ஆற்றுக்குள் விழுந்தது. இதேபோல் லால்குடி அருகே அன்பிலில் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் மண் சரிவு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொட்டியம் அருகே சிலை பிள்ளையார்புத்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு சேதமடையும் நிலையில் உள்ளது. இந்த கிணறு சேதமடைந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் வினயோகம் பாதிக்கப்படும்.

தரைப்பாலம் மூழ்கியது; போக்குவரத்து துண்டிப்பு
அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் 7 கண் மதகில் உடைப்பு ஏற்பட்டதால்  கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீர் தா.பழூர்-அண்ணங்காரம்பேட்டை சாலை தரைபாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சாலையில் செல்லும் கும்பகோணம், ஜெயங்கொண்டம் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.