டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில் ஒரு வெற்றியைப் பெற்று நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது கடைசி ஓவரை வீசிய போது வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயமடைந்தார். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார்.
மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷன், காயம் காரணமாக நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய காயம் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் எனத் தெரிகிறது.
இதையடுத்து, இலங்கை அணியின் மாற்று வீரர்களாக மேலும் சில வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். 30 வயது துஷ்மந்தா சமீரா இலங்கை அணிக்காக 12 டெஸ்டுகள், 42 ஒருநாள், 52 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.