டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்.26ம் தேதி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் அந்த மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. ேதர்தலில் தகுதியான 9,915 பிரதிநிதிகள் வாக்களித்தனர்; 96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது மாநிலம் வாரியாக வாக்குபெட்டிகள் பிரிக்கப்பட்டு, அவற்றில் இருந்து வாக்குச்சீட்டுகள் டிரம்மில் கொட்டப்பட்டன. எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின், வாக்குச் சீட்டுகள் நூறு நூறாக பண்டல்களாக கட்டப்பட்டன. தொடர்ந்து பதிவான வாக்குகள் வேட்பாளர் வாரியாக பிரிக்கப் பட்டு எண்ணப்பட்டன.
தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே முன்னிலை வகித்தார். இறுதியில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவராகும் நேரு குடும்பத்தைச் சாராத தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவார். இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்.26ம் தேதி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.