சென்னை ரெயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 23) என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சத்யா (வயது 20) என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13ம் தேதி இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்யாவை, சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பிறகு தப்பியோடிய இளைஞர் சதீஷை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஓடும் ரயில் முன்பு மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இளைஞர் சதீஷ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனக்குக் கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
ஒரு தங்க மான்குட்டியைத்
தண்டவாளத்தில்
தள்ளினான் ஒரு பேய்மகன்தனக்குக் கிடைக்காததெல்லாம்
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
மனிதகுலம் நினைத்திருந்தால்
இந்த பூமி
ஒரு மண்டையோடு போலவே
சுற்றிக்கொண்டிருந்திருக்கும்கிட்டாதாயின்
வெட்டென மற— வைரமுத்து (@Vairamuthu) October 18, 2022
இந்த நிலையில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, மாணவி சத்யஸ்ரீ மரணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன். தனக்குக் கிடைக்காததெல்லாம் யாருக்கும் கிடைக்கக்கூடாதென மனிதகுலம் நினைத்திருந்தால் இந்த பூமி ஒரு மண்டையோடு போலவே சுற்றிக்கொண்டிருந்திருக்கும். கிட்டாதாயின் வெட்டென மற’ என பதிவிட்டுள்ளார்.