பரோலில் வெளியே வந்துள்ள பாலியல் வன்கொடுமை தண்டனை குற்றவாளி குர்மித் ராம் ரஹீம் நடத்திய ஆன்லைன் சத்சங்கத்தில் ஹரியானா பாஜக தலைவர்கள் பங்கேற்ற வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிர்சாவில் உள்ள தனது ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆகஸ்ட் 2017 இல் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மித் ராம் ரஹீம் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் 40 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் இருந்து சத்சங்கம் ஒன்றை குர்மித் ராம் ரஹீம் தொகுத்து வழங்கினார். இந்த ஆன்லைன் சத்சங்கத்தில் ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவர்கள் பங்கேற்றது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பாஜக தலைவர்களில் கர்னால் மேயர் ரேணு பாலா குப்தா, துணை மேயர் நவீன் குமார் மற்றும் மூத்த துணை மேயர் ராஜேஷ் அகி ஆகியோர் பங்கேற்றதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Out on parole, A convicted rapist Gurmeet Ram Rahim holds a satsang.
Karnal Mayor Renu Bala Gupta attended the online Satsang to take his blessings just before panchayat elections. pic.twitter.com/GHvf7fjbY4
— Mohammed Zubair (@zoo_bear) October 19, 2022
ஹரியானாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் வாக்குகளை பெறுவதற்காகவே செல்வாக்கு மிக்க ஆன்மீகத் தலைவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் பங்கேற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சத்சங்கத்தில் பங்கேற்ற நவீன் குமார், “உ.பி.யில் இருந்து ஆன்லைன் சத்சங் செய்யப்பட்டது. எனது வார்டில் பலர் பாபாவுடன் தொடர்புடையவர்கள். நாங்கள் சமூகத் தொடர்பிலிருந்து இந்த திட்டத்தை அடைந்தோம், அதற்கும் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற ராம் ரஹீமின் ஆசீர்வாதம் வேண்டுமா என்று கேட்டதற்கு, “தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்களின் ஆசிர்வாதம் அவசியம்” என்றார் நவீன் குமார். “அனைத்து குற்றவாளிகளுக்கும் பரோல் கோர உரிமை உண்டு. மாநிலத்தில் லட்சக்கணக்கான பின்பற்றுபவர்களைக் கொண்ட மதத் தலைவருக்கு சிறப்பு மரியாதை எதுவும் இல்லை. அவர் தீபாவளி பண்டிகைக்காக பரோல் எடுத்திருக்கலாம். அதை நாம் தேர்தலுடன் ஒப்பிடக்கூடாது” என்று அவர் கூறினார்.
ஹரியானா மாநிலத்தில் நவம்பர் 3 ஆம் தேதி அடம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் நவம்பர் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM