சென்னை: “இந்தியாவின் மதச்சார்பற்ற அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடிவரும் இந்த முக்கியத் தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கார்கே தேர்வாகியுள்ளார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.
இந்தியாவின் மதச்சார்பற்ற – அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடிவரும் இந்த முக்கியத் தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கார்கே தேர்வாகியுள்ளார். தமது புதிய பொறுப்பில் அவர் வெற்றி காண வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் 7,897 வாக்குகளுடன் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அவர் தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்றார்.