வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையிலேயே தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், இதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காது எனக்கூறியுள்ளார்.
அதிக இறக்குமதி
உலகளவில் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தானும் உள்ளது. இது 2020- 21 நிதியாண்டில்1.92 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
நிராகரிப்பு
உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. கச்சா எண்ணெய் வாங்கவும் தடை விதித்துள்ளது. ஆனால், அதனையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை இந்தியா நிராகரித்துவிட்டது.

இந்தியாவுக்கு பாராட்டு
ரஷ்யா தாக்குதலை துவங்கிய அன்று, அங்கு சென்ற அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், இந்த பயணத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆட்சியில் இருந்து விலகிய பின்னர், தனது ஆட்சியை கவிழ்த்ததற்கு அமெரிக்கா தான் காரணம் எனகுற்றம்சாட்டிய இம்ரான்கான், தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு அடிக்கடி பாராட்டு தெரிவித்து வந்தார். அவ்வாறு பாகிஸ்தானால் வாங்க முடியவில்லை எனக்கூறியிருந்தார்.
எதிர்ப்பு இருக்காது
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள இஷாக் தர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையில் வழங்கினால், அதனை வாங்க தயாராக உள்ளோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காது. ஏனென்றால், நாங்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரழிவை சந்தித்துள்ளோம் என்றார்.
விரிசல்
தற்போது, முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா – பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், உலகில் மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement