நேற்று சட்டப் பேரவையில் தூப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அளித்துள்ளார். இது குறித்து இன்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையை அப்போதைய அதிமுக அரசு சரியாக கையாளவில்லை. மக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிய அப்போது அந்த அரசு தயாராக இல்லை.
அது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையை பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். அதிலும் குறிப்பாக துப்பாக்கிச்சூடு திட்ட மிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் இரண்டு பெண்கள் என்று மொத்தம்13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும், 40 பேர் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்.
அன்றைய முதலமைச்சராக இருந்த பழனிசாமியின் எதேச்சதிகாரத்திற்கு அந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது. நானும் இந்த சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று பழனிசாமி கூறியது யாரும் மறந்திருக்க முடியாது.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க “கடப்பாரைய விழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவாங்க” அப்படின்னு. அந்த அளவிற்கு அவர் மிகப்பெரிய பொய்யை அன்று சொல்லியுள்ளார்.
இந்த ஆணையத்திடம் வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி உள்ளிட்டோர் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை நிமிடத்திற்கு நிமிடம் அவருக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்கள்.
இதில் ஊடகங்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்பது மிகத்தவறான ஒன்று” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.