பெங்களூரு :’கர்நாடகாவை வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்த இலக்கை அடைய உயர் அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
திட்ட துறையின், கர்நாடக பொருளாதாரம் சர்வே 2021 – 22 அடிப்படையில், தொழிலதிபர் மோகன்தாஸ் பை, பிரபல எழுத்தாளர் நிஷா ஹொல்லா ஆகியோர் தயாரித்த ‘கர்நாடகா ஒரு டிரில்லியன் ஜி.டி.பி., விஷன்’ என்ற ஆய்வறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது:
கர்நாடகாவை வரும் 2025ம் ஆண்டிற்குள் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடைய திட்டம் தயாரித்து, கண்காணித்து அமல்படுத்த வல்லுனர்கள் கமிட்டி அமைக்கப்படும். அமல்படுத்த கூடிய திட்டங்கள் கொண்ட திட்ட அறிக்கை, டிசம்பருக்குள் தயாராகும்.
நாட்டின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக மாற்றும் நோக்கம் உள்ளது. அதற்கு, கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் வழங்குவதே இலக்கு. திட்டத்தின் ஒரு அங்கமாக, முதலீட்டை ஈர்க்கும் வகையில், மங்களூரு துறைமுகம் விரிவாக்கம் செய்து கடலோர தொழிற்பேட்டை மேம்படுத்தப்படும். நிர்வாக செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனி நபர் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியது அவசியம். தொழில், விவசாயம், சேவை பிரிவுகளில் வளர்ச்சி காண வேண்டும். தொழில் மற்றும் தனியார் பிரிவுகளில் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement