அக்.26ம் தேதி காங். தலைவராக பொறுப்பேற்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே வரும் 26ம் தேதி முறைப்படி பொறுப்பேற்க இருக்கிறார். புதிதாக பொறுப்பேற்க உள்ள அவருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் கடந்த 17ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டதால் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். கடந்த 17ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், வாக்களிக்க தகுதி பெற்ற 9,900 வாக்காளர்களில் 9,500 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு நேற்று எண்ணப்பட்டது.

இதில், மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்றார். 416 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கட்சி நிர்வாகிகள், மேள தாளத்துடன் வெற்றியை கொண்டாடினர். கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், கார்கே இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். சசிதரூரும் நேரில் சென்று வாழ்த்தினார். ஆந்திராவில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்துள்ள ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற கார்கே, வரும் 26ம் தேதி முறைப்படி கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு வெளியானதும், கார்கே நிருபர்களிடம் கூறுகையில், ‘சுதந்திரமடைந்தது முதல் இந்த நாட்டின் ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தி உள்ளது. இன்றைக்கு ஒவ்வொரு அமைப்பும் கலைக்கப்படுகின்றன. ஜனநாயகம், ஆபத்தில் உள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தி காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்த உழைத்துள்ளது. எனது கூட்டாளி சசி தரூருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நான் அவரை சந்தித்தேன். கட்சியை முன்னோக்கி அழைத்து செல்வது பற்றி விவாதித்தேன். கட்சி ஊழியர்கள் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது தலைமையின்கீழ், நாம் மத்தியில் இருமுறை ஆட்சி அமைத்தோம். காங்கிரஸ் ஊழியர்கள் அனைவரும் சமம்தான்.

அனைவரும் ஒன்று சேர்ந்து, நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள பாசிச சக்திகளை எதிர்த்து போராட வேண்டும். கட்சியில் யாரும் பெரியவர்களும் இல்லை. சிறியவர்களும் இல்லை. எல்லோரும் ஊழியர்கள்தான். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்’ என்றார். காந்தி குடும்பத்தை சேராதவர்: 24 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, சுதந்திரத்திற்கு பிறகு தென் மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 7வது காங்கிரஸ் தலைவர். 1942ம் ஆண்டு கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர். அண்டை மாவட்டமான குல்பார்காவில் வளர்ந்தார்.

அங்கு பள்ளிப்படிப்பு மற்றும் சட்டப்படிப்பை முடித்து தொழிலாளர் சங்கங்களின் வழக்குகளில் ஆஜராகினார். மாணவ பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1972ம் ஆண்டு அப்போதைய கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருந்த தேவராஜ் அர்ஸ், கார்கேவை, உயர் சாதியினர் அதிகமுள்ள தொகுதியான குர்மித்கல்லில் போட்டியிட வைத்தார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதே தொகுதியை தொடர்ந்து 9 முறை கைப்பற்றினார். சிறந்த நிர்வாகியாக அறியப்படும் கார்கே, கர்நாடக காங்கிரஸ் அரசுகளில் பலமுறை அமைச்சராக பதவி வகித்தவர். அங்கு 2000ல் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம், 2002ல் காவிரி பிரச்னையால் ஏற்பட்ட மோதல்களின்போது மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கார்கேதான்.

இருப்பினும் முதல்வர் நாற்காலி அவருக்கு கிட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு, 2009ம் ஆண்டு குல்பர்கா மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று டெல்லி அரசியலுக்கு நகர்ந்தார்.  அதே தொகுதில் 2014ம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். எனினும் மாநிலங்களவை உறுப்பினராக அவருக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி தலைவராகவும், ரயில்வே, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்.

மிகவும்  நெருக்கடியான காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்கேவுக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மேலும் ஏராளமான மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. இதனால் கட்சியை பலப்படுத்தும் மிக முக்கிய பணி கார்கேவுக்கு உள்ளது. மேலும் தான் காந்தி குடும்பம் ஆட்டுவிக்கும் பொம்மை அல்ல என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அனைத்து விவகாரங்களிலும் நான்
 காந்தி குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசில் தொடர்ச்சியாக கட்சியை விட்டு மூத்த உறுப்பினர்கள் வெளியேறுவதை தடுப்பது மற்றும் அதிருப்தியாளர்கள், கோஷ்டி பூசல் என அனைத்தையும் ஒன்றிணைப்பதும் கார்கேவுக்கு சவாலானதாகவே இருக்கும். மேலும் 2024ல் மக்களவை தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்பாக இமாச்சலபிரதேசம், குஜராத் சட்டமன்ற தேர்தல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலும் காத்திருக்கிறது என்றே கூறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.