தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த 2019-ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இதேபோல், கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும், தமிழிசைக்கும் இடையே நேரடி கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தெலங்கானா ஆளுநராகத் தனது 3 ஆண்டுக்காலப் பயணம் குறித்து ‛ரீடிஸ்கவரிங் செல்ப் இன் செல்ப்லெஸ் சர்விஸ்’ (Rediscovering self in selfless service)என்ற தலைப்பில் 486 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை சென்னையில் இன்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டார்.
இப்புத்தகத்தில் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவியேற்றது முதல் 2022 செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழிசை மேற்கொண்ட பணிகள் புகைப்பட வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களின் உரிமையாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “சிலர் என்னை உட்சபட்ச பதவியில் உட்கார வைக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். எனக்கு அந்த பதவிகளெல்லாம் வேண்டாம். சாதாரண ஒருவராக மக்களோடு மக்களாக அவர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அத்தகைய உதவியைச் செய்யும் ஒருவராக வாழ வேண்டும் என நினைக்கிறேன். தெலங்கானா ஆளுநராக நான் அந்த மாநில ஆட்சியில் இடையூறு செய்ததில்லை.
ஆனால், என்னுடைய பணிகள் இடையூறாக இருக்கிறதென ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். குடியரசு தினத்தன்று என்னைக் கொடியேற்றவிடவில்லை. இதனால், ராஜ் பவனிலேயே கொடியேற்றினேன். நான் தெலங்கானாவில் இருக்கும்போது, இவர் எப்போது புதுச்சேரிக்குப் போவார் என்கிறார்கள். புதுச்சேரியில் இருக்கும் போது `தெலங்கானாவில் உங்களை விரட்டிவிட்டார்களா? அதான் இங்கு வந்துவிட்டீர்களா’ என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்தால் `இரண்டு மாநிலத்திலும் வேலை இல்லையா இங்கு வந்துவிட்டீர்கள்’ என்கிறார்கள். இன்றைக்குச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், தெலங்கானாவில் உண்மையாக பணியாற்றுகிறேன். புதுச்சேரியில் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகத்தில் முழுமையான அன்பைச் செலுத்துகிறேன்.
என்னைச் செதுக்கியவர்களைவிட ஒதுக்கியவர்களே அதிகம். இதனால், சோர்ந்துவிட மாட்டேன். எனக்கு தனி விமானத்தில் பயணம் செய்யும் உரிமை இருக்கிறது. ஆனால், இதுவரையில் நான் தனி விமானம் எடுத்ததில்லை. நான் எங்கு சென்றாலும் ரயிலில் மட்டுமே பயணம் செய்கிறேன். இன்று வரையில் ஒரே ஒரு உதவியாளருடன்தான் பயணம் செய்கிறேன். நான் மற்றவர்களை காப்பாற்றுவேனே தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்றும் நிலை எப்போதும் வந்ததில்லை. தெலங்கானா ராஜ் பவனில் மாதந்தோறும் என்னுடைய உணவுக்கு ஆகும் செலவை தெலங்கானா ராஜ் பவனில் செலுத்திவிடுகிறேன். நான் எதிரணியில் இருந்தாலும் என் அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமையை முழுமையாகச் செய்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பலரும் என்னை கொண்டாடினாலும் சில வருத்தங்கள் என் மனதில் உண்டு. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள், வாலை நுழைக்கிறீர்கள் என்கிறார்கள். இன்று சொல்கிறேன், தமிழ்நாட்டில் நான் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என்று எதுவும் கிடையாது. தமிழகத்தில் எந்த தவறு நடந்தாலும் அதை சுட்டிக்காட்டுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. இதேபோல, புதுச்சேரியிலோ நான் அன்றாட நிகழ்வுகளில் தலையிடக்கூடாது என்று நாராயணசாமி கூறுகிறார். அண்ணன் ரங்கசாமியும், நானும் இணக்கமாகச் செயலாற்றும்போது மக்களுக்கு கிடைக்க வேண்டியது உடனடியாக கிடைக்கிறது. எனவே, தயவு செய்து அரசியல் நாகரிகத்தை கடைபிடியுங்கள். எனது பணி மக்களுக்கானது. எதாவது ஒரு வகையில் அந்த பணி மக்களை சென்றடை வேண்டுமென நினைக்கிறேன். எனது பங்கு அரசியலில் எப்போதும் இருக்கும்” என்றார்.