ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு வேலை; 22ம் தேதி நடக்கிறது ‘ரோஸ்கர் மேளா’!

இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் நாட்டின் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக நன்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் பெண்கள் பணி செய்வது உலகத்திலேயே மிகவும் குறைந்த அளவு உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே அவர்களது வேலையின்மையை போக்குவதும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்த சூழலை மாற்றும் வகையில் சமீப காலமாக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தோல்வியில் முடிவதாகவே எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

அதே சமயம் இந்திய பொருளாதாரத்தில் போதுமான வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதில்லை என்கிற பகீர் குற்றச்சாட்டும் பெருவாரியான இளைஞர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் எதிர்கட்சிகள் முன் வைக்கும் விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் கவலையை போக்கும் விதமாகவும் பிரதமர் மோடி எடுத்துள்ள முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’’ என்கின்ற மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழாவை வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று, பல்வேறு துறைகளில் பணிக்கு சேருகின்ற 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற இருக்கிறார்.

இந்த திட்டத்தின் படி நாடு முழுவதும் இருந்து தேர்வாகும் இளைஞர்கள் அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகளின் பணிகளில் சேருவார்கள். ஏற்கனவே பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணி இடத்தை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார்.

இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆள்சேர்ப்பு நடக்கிறது. இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.