சென்னை: சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான செயலியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரயில் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற பணிகள் அல்லது போராட்டங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சாலை மூடப்படுவது அல்லது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அப்படி போக்குவரத்து மாற்றம் செய்யும்போது காவல் துறையால் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்த தகவல் கூகுள் மேப்பில் உடனடியாகக் காட்டப்படுவதில்லை. இதன் காரணமாக கூகுள் மேப்பைப் பயன்படுத்தும் சாலைப் பயனாளிகளுக்கு, வரைபடத்தில் உள்ள மூடப்பட்ட சாலை அல்லது போக்குவரத்து மாற்றம் தொடர்பாக தகவல் காட்டுவதில்லை.
இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் Lepton என்ற நிறுவனத்துடன் இணைந்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘roadEase’ என்ற இந்தச் செயலியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு குறிப்பிட்ட சாலையை மூடுவது மற்றும் அதன் கால அளவு குறித்து Lepton நிறுவனத்திற்கு தெரிவிக்கும். Lepton நிறுவனம் அதனை ‘roadEase’ என்ற செயலி மூலம் 15 நிமிடங்களுக்குள் கூகுள் மேப்பில் புள்ளியிடப்பட்ட சிவப்பு கோட்டுடன் மூடப்பட்ட சாலைகளை காண்பிக்கும். அதே நேரத்தில், மூடப்பட்ட பிறகு வாகனங்கள் செல்லக்கூடிய சிறந்த வழியையும் வரைபடம் காண்பிக்கும். இந்தச் செயலியின் செயல்பாடுகள் குறித்து கடந்த நான்கு நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.