தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வரபிரசாதம். இவரின் மனைவி விசுவாசம் மேரி. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு இவர்களுக்குள் சண்டை வந்திருக்கிறது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மனைவி மீதான கோபத்தால் தூங்காத வரபிரசாதம், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த விசுவாச மேரியை அரிவாளால் வெட்டினார். இதில் ரத்த வௌத்தில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து விசுவாச மேரியின் சடலத்தை போர்வையால் மூடிய வரபிரசாதம் அந்த அறையின் கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. காலையில் விசுவாச மேரியின் அறை வெளிபக்கமாக பூட்டபட்டிருப்பதைப் பார்த்த குழந்தைகள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்துகிடந்தார். இதையடுத்து சிட்லபாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் வரபிரசாத்தை போலீஸார் தேடிவருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “மனைவியைக் கொலைசெய்து விட்டு தலைமறைவாக இருக்கும் வரபிரசாதம், கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி விசுவாச மேரி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு அவர் காலதாமதமாக வந்தால், அவரின் நடத்தையில் வரபிரசாதம் சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் வரபிரசாதம் மதுவுக்கும் அடிமையானவர். இந்தச் சூழலில்தான் விசுவாச மேரியை கொலைசெய்து விட்டு வரபிரசாதம் தலைமறைவாகியிருக்கிறார். இந்தக் கொலை சம்பவம் நடக்கும் போது விசுவாச மேரியின் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அம்மாவின் அலறல் சத்தம் கேட்கவில்லை. காலையில்தான் கொலை சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது” என்றனர்.