“தற்கொலை என ஒத்துக்க சொல்லி உறவினர்களை வற்புறுத்துகிறாங்க”-கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை, வேறு ஒரு நேர்மையான புலனாய்வு அதிகாரி தலைமையில் நடத்த உத்தரவிடக்கோரி மாணவியின் தாயார் செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூலை 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களும், உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர். மாணவியின், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், மாணவி படித்த பள்ளியை உறவினர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம், கல்வீச்சு, பேருந்துகளுக்கு தீவைப்பு என கலவரமாக மாறியது.
இதையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்திலேயே ஒருதலைப்பட்சமாக விசாரிப்பதாகவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை என மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க தலைமைச் செயலகம் வந்தவர், முதலமைச்சரை சந்திக்க இயலவில்லை.
image
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தாயார் செல்வி, சிபிசிஐடி அதிகாரிகள், மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்திலேயே விசாரிப்பதாகவும், எந்தவிதமான விசாரணையும் சரிவர நடத்தவில்லை, தாங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களையும் அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் தன்னை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் யூட்யூப் சேனல் மீதும், இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். எனவே நியாயமான முறையில் விசாரணை நடத்த ஏதுவாக வேறொரு நேர்மையான அதிகாரியிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக சி.பி.சி.ஐ.டி விசாரணையில் நம்பகதன்மை இல்லையெனவும், தனது மகள் வழக்கு விசாரணையை, தனிக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் மாணவியின் தாயார் செல்வி டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மன் எதுவும் அனுப்பாமல் தனது மகள் மரணத்தில் சம்மந்தமே இல்லாத தங்கள் உறவினர்களை மணிக் கணக்கில் காக்கவைத்து விசாரிப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விரைந்து விசாரணை முடித்து அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறினார்.
image
மேலும், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணையின்போது தனது உறவினர்களிடம் மாணவியின் மரணம் தற்கொலை என ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் செல்ஃபோன்களை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் தெரியவரும் என்ற அவர், ஆனால் அதற்குப் பதிலாக அதிகாரிகள் தனது உறவினர்களின் செல்ஃபோனை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய மாணவியின் தாயார் செல்வி, தங்களுக்கு சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை எனவும், தனியாக ஒரு குழு அமைத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரது மேற்பார்வையில் பாரபட்சமற்ற முறையில் புலன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.