“பழங்குடியினர் பாரம்பரியங்களை முந்தைய அரசுகள் கேலிக்குரியதாக ஆக்கின. பழங்குடி சமூகத்தினர் நல்வாழ்வு எங்களின் உயர் முன்னுரிமையாக இருக்கிறது; நாங்கள் எங்கே அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.
குஜராத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இணைப்பு இல்லாத பகுதிகளின் கட்டமைப்புடன் சபுத்தாராவிலிருந்து ஒற்றுமை சிலை வரையிலான சாலையை மேம்படுத்துதல், தபி, நர்மதா மாவட்டங்களில், ரூ.300 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியவை இந்தத் திட்டங்கள்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “கடந்த இரு தசாப்தங்களாக இவர்களின் அன்பைப் பெற்று ஆசீர்வதிக்கப்படுவதாக உணர்கிறேன். பல பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள உங்களின் ஆர்வத்தை காணும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. எமது ஆற்றல் நிலை அதிகரிக்கிறது. இந்தக் கடனை திருப்பித் தரும் வகையில், உங்களின் வளர்ச்சிக்கு முழு மனதோடு நான் முயற்சி செய்வேன். இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்கூட தபி, நர்மதா உள்ளிட்ட ஒட்டுமொத்த பழங்குடி மக்கள் பகுதி மேம்பாட்டோடு தொடர்புடையவை.
பழங்குடி மக்கள் நலன் மற்றும் பழங்குடி சமூகத்தினர் நல்வாழ்வு என 2 வகையான கொள்கைகளை நாடு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பழங்குடி மக்களின் நலன் பற்றி கவலைப்படாத கட்சிகள் உள்ளன. அவை பழங்குடி மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைப் பெற்றுள்ளன. மறுபக்கம் பிஜேபி போன்ற கட்சி பழங்குடியினர் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. பழங்குடியினர் பாரம்பரியங்களை முந்தைய அரசுகள் கேலிக்குரியதாக ஆக்கின. மறுபக்கம் நாங்கள் பழங்குடியின பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கிறோம். பழங்குடி சமூகங்களின் நல்வாழ்வு எங்களின் உயர் முன்னுரிமையாக இருக்கிறது. நாங்கள் எங்கே அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம்.
மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறை, வீட்டுக்கு செல்வதற்கான சாலை, அருகிலேயே மருத்துவ மையம், கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே வருவாய்க்கான வசதி, குழந்தைகளுக்கான பள்ளி ஆகியவற்றுடன் எனது பழங்குடி சகோதர சகோதரிகளுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கவேண்டும்.
தபி மற்றும் அதன் அருகே உள்ள பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான புதல்விகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்வதை இன்று காணமுடிகிறது. தற்போது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான புதல்வர்களும், புதல்விகளும் அறிவியல் படிக்கிறார்கள். மருத்துவர்களாகவும், பொறியளார்களாகவும் ஆகிறார்கள். 20-25 ஆண்டுகளுக்கு முன் இங்கே பிறந்த இளைஞர்களுக்கு உமர்காம் முதல் அம்பாஜி வரையிலான ஒட்டுமொத்த பழங்குடியின பகுதியிலும் மிகச் சில பள்ளிகளே இருந்தது. அறிவியல் படிப்பதற்கு குறைந்த வசதிகளே இருந்தன. குஜராத்தில் நேற்று தொடங்கப்பட்ட மிகச் சிறந்த பள்ளிகளுக்கான இயக்கத்தின் கீழ், பழங்குடியின மக்கள் வாழும் வட்டங்களில் சுமார் 4 ஆயிரம் பள்ளிகள் நவீனமாக்கப்படும்.
பழங்குடியின குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு நிதி ஒதுக்கீடு இருமடங்காக்கப்பட்டுள்ளது. நமது பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கு சிறப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். வெளிநாடு சென்று படிக்கவும், நிதியுதவி வழங்கப்படுகிறது. கேலோ இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் விளையாட்டுக்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்ததால் நன்மைகள் பல. இதன் மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு அவர்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது.
பழங்குடியினர் நல்வாழ்வுக்கான அமைச்சகம் ஒரு காலத்தில் இல்லை. முதல் முறையாக அடல் ஜி அரசில்தான் பழங்குடியினர் நல்வாழ்வுக்காக அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தில் கிராம சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் பழங்குடியினர் வாழும் பகுதிகள் பயனடைந்தன.
கடந்த 7-8 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அனைவரின் முயற்சியுடன் வளர்ச்சியடைந்த குஜராத்தை வளர்ச்சி அடைந்த இந்தியாவை நாம் கட்டமைப்போம்” என்றார்.