வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை மையம்| Dinamalar


புதுடில்லி: தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதையடுத்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

latest tamil news

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும்.

காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து, 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும். இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிக்கையில் கூறியுள்ளது.

32 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்!

இது குறித்து,சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பதூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 32 மாவட்டங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(அக்.,21): தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,விருதுநகர், மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்,புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல் வரும்(அக்.,24)ம் தேதி வரை செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.