கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பட்டா கேட்டு திருநங்கைகள் மனு அளித்த 3 நாட்களில் இடம் தேர்வு : இன்று அமைச்சர் முன்னிலையில் பட்டா வழங்க நடவடிக்கை

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வேண்டி திருநங்கைகள் மனு அளித்த 3 நாட்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இன்று அமைச்சர் முன்னிலையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் திருநங்கைகள் மனு அளித்திருந்தனர்.

அதில், திருப்பத்தூர் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் வாழ்ந்து வருகிறோம். நாங்கள்  அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடகை வீட்டில் இருந்து வருகிறோம். இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடத்தை பட்டா வழங்காமல் வருவாய்த்துறையினர் இருந்து வருகின்றனர்.

தற்போது நாங்கள் வாடகை வீட்டிலும் எங்களை காலி செய்ய சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் திருநங்கைகள் மனு அளித்திருந்தனர். அப்போது, மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் திருநங்கைகளுக்கு திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த இடத்திற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது, குனிச்சி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அருகே வருவாய்த்துறை பின்னர் மூலம் அளவீடு செய்யப்பட்டு தங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வார காலத்திற்குள் உங்களுக்கு அந்த பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், நேற்று குனிச்சி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அருகே இடத்தை தேர்வு செய்து மனு அளித்த 60க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, இன்று திருப்பத்தூர் இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அனைத்து திருநங்கைகளுக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா  தெரிவித்துள்ளார்.  மனு அளித்து மூன்று நாட்களில் கலெக்டர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்கியதற்கு திருநங்கைகள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.