புதுச்சேரி: நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவர் தலையீடு எதுவும் இல்லை என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ”அனைவருக்கும் நன்றாக இருக்கவும், மகிழ்ச்சியோடு வாழவும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், சிறப்போடும் வாழ்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறது.
குறிப்பாக, ஏழை – எளிய மக்களுடைய வாழ்க்கை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் எல்லா சமுதாய மக்களுக்களும் நலத்திட்டங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்குகின்ற திட்டங்கள் தற்போது நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கு இலவச, துணி வழங்குவதற்கு பதிலாக அதற்கான பணம், முழுவதும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் ரூ.15 கோடியே 25 லட்சத்து 31 ஆயிரத்து 320 வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 4 மாதங்களுக்கு வழங்க வேண்டிய அரிசிக்கான பணம் ரூ.43 கோடியே 85 லட்சத்து 83 ஆயிரத்து 200 அனைத்து அட்டைதாரர்களுக்கும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு மாதத்துக்கு சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.600-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.300-ம் கிடைக்கும். இந்தாண்டு அனைத்து திட்டங்களுக்கான உதவித்தொகைகள் பயனாளிகளின் வங்கி கணக்கில் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.3,500 வழங்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு இப்போது இல்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொடர்பாக என்னுடைய கவனத்துக்கு இன்னும் வரவில்லை. பாண்லே தனியார் மயமாக்கும் எண்ணம் அரசிடம் நிச்சயமாக கிடையாது. கூட்டுறவு நிறுவனமாகத்தான் பாண்லே தொடர்ந்து இயங்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மறு திட்ட மதிப்பீட்டில் ரூ.1,400 கோடி கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதி தனித்தனியாக பிரித்துக் கொடுப்பார்கள். இந்த நிதியில் ரூ.400 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் துறை தனியார் மய பிரச்சினை சம்பந்தமாக ஊழியர்களின் கோரிக்கை முழுவதையைும் பரிசீலித்து, அவர்களுக்கு ஏற்றவாறு சுமூகமான முடிவு எடுக்கப்படும். கடந்த மழைக்காலத்தில் புதுச்சேரியில் மழைநீர் தேங்கி இருந்தது. அதுபோன்று இந்தாண்டு இல்லாமல் இருப்பதற்கான பணிகளை அரசு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மழைக்காலத்தில் முழுவதும் தண்ணீர் தேங்காத அளவுக்கு அனைத்தும் சரி செய்யப்படும். கடந்த மழைக் காலத்தில் சேதமடைந்த சாலைகளை போட்டு வருகிறோம். புதுச்சேரி முழுவதும் முன்பு இருந்ததுபோல் சிறந்த முறையில் சாலைகள் போடப்படும்.
நிர்வாகத்தில் ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவர் தலையீடு எதுவும் இல்லை. எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய முடியும். அரசு பணியிடங்களை நிரப்பவும், புதிய தொழிற்சாலை கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், புதுச்சேரி வளர்ச்சிக்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார். அப்போது மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தை போல் புதுச்சேரியில் தீர்மானம் கொண்டுவரப்படுமா? என்று கேட்டதற்கு, “சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போது சொல்கிறேன்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.