திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 25ம்தேதி நிகழும் சூரிய கிரகணத்தின்போது நடை திறந்தே இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார் கீர்த்திவாசன் குருக்கள் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கியமான விழாக்களின்போது கோயில் குளங்கள் மற்றும் தென்பெண்ணை, செய்யாறு, கவுதம நதி போன்றவற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
சூரிய, சந்திர கிரகணங்களின்போது அண்ணாமலையார் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி, சூரிய கிரகணம் வரும் 25ம் தேதி மாலை நிகழ உள்ளது. அண்ணாமலையார் கோயில் ஆன்மிக மரபுபடி, அன்றைய தினம் வழக்கம்போல நடை திறந்தே இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தவித தடையும் இல்லை. இது, அக்னி ஸ்தலம் என்பதால், இங்கு மட்டும் கிரகணத்தின்போது திருக்கோயில் நடை அடைப்பதில்லை.
சந்திர கிரகணத்தின்போது, கிரகணம் முடியும்போதும், சூரிய கிரகணத்தின்போது கிரகணம் தொடங்கும் போதும் அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 25ம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் உதய நாழிகையில், திருக்கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும். இவ்வாறு கீர்த்திவாசன் குருக்கள் தெரிவித்தார்.