கழிவறை குழாய் பதிக்க தோண்டப்பட்ட 30 அடி ஆழ குழிக்குள் விழுந்த மாணவர்: கயிறுகட்டி பத்திரமாக மீட்பு

லூதியானா: பஞ்சாப் பள்ளியில் கழிவறை குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த மாணவரை, அப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா அடுத்த லால்ஹேரியில் அரசின் தொடக்கப்பள்ளியில் ஜாக்சீர் (8) என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். அவர், பள்ளியின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த 30 அடி ஆழத்தில் இருந்த குழிக்குள் விழுந்தார். மாணவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களில் ஒருவரான தொழிலாளி பல்விந்தர் சிங் என்பவர், கயிறுகட்டி ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கினார். எதிர்பாராத விதமாக அந்த கயிறு அறுந்தது. அதனால், பல்விந்தர் சிங்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர், அப்பகுதியினர் மற்றொரு கயிற்றை கொண்டு வந்து ஜாக்சீர் மற்றும் பல்விந்தர் சிங் ஆகிய இருவரையும் ேபாராடி வெளியே இழுத்தனர்.

இருவரும் காயமடைந்து இருந்ததால், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்; அங்கிருந்து அவர்கள் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். சதர் கன்னா போலீஸ் இன்ஸ்பெக்டர் நச்சார் சிங் கூறுகையில், ‘மாணவருக்கும், பல்விந்தர் சிங்குக்கம் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யவில்லை. கழிவறை குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. தற்போது அந்த குழியை மூடிவிட்டோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.