ரேவா: மத்திய பிரதேசத்தின் மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 15 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து ரேவா அடுத்த சுஹாகி மலை அருகே நேற்று இரவு 11 மணியளவில் பேருந்து, கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர்.
நேற்று நள்ளிரவு முதல் மீட்புப் பணிகள் நடைபெற்றன. காயமடைந்த சிலரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிவாரண உதவிகளையும், தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ரேவா போலீஸ் எஸ்பி நவ்நீத் பாசின் கூறுகையில், ‘ஐதராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் இருந்த அனைவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்; சுஹாகி மலைப் பகுதி வழியாக சரிவான பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 40 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.