தித்திக்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டம்.. வீடுகள் தோறும் கரைபுரண்டோடும் உற்சாகம்!

தித்திக்கும் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

தீபம் என்றால் விளக்கு… ஆவளி என்றால் வரிசை… வரிசையாய் விளக்கேற்றி இருள்நீக்கி ஒளிதரும் பண்டிகைதான் தீபாவளி….

மகிழ்ச்சியான இந்த நன்னாளில், சிறுவர்களும், பெரியவர்களும் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை அணிந்தனர்.

சின்னஞ்சிறு குழந்தைகள் வண்ணஆடை அணிந்து, குதூகலத்துடன் மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புத்தாடை அணிந்த இளைஞர்களும், பெரியவர்களும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து இனிதே கொண்டாடுகின்றனர் தீபாவளிப் பண்டிகையை….

எங்கு பார்த்தாலும் பலத்த சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளும், கண்ணைக் கவரும் வகையில் வர்ண ஜாலம் காட்டும் வெடிகளுமாக காணப்படுகின்றன.

தித்திக்கும் தீபாவளியையொட்டி, நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் வண்ணவண்ண ஆடைகளுடன் வலம் வந்தனர்.

சென்னையின் முக்கிய கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். பார்த்தசாரதி கோவில், கபாலீசுவரர் கோவில், சாய்பாபா ஆலயம், திருவேற்காடு,மாங்காடு, வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களுக்கு அதிகாலையிலேயே ஏராளமானோர் வந்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் அதிகாலையிலேயே பக்தர்கள் புத்தாடைகளுடன் வந்து வழிபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.