நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சினேகா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை கணவர் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் பல நாட்கள் தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, சினேகா தனது குழந்தையுடன் மைக்கேல் மதன் சிங்கின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் சினேகா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த மைக்கேல், மனைவியிடம் இருந்து போனை பிடுங்கி ஆவேசமாக உடைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சினேகா அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக்கொண்டு உள்ளே தூக்குப்போட்டுக் கொண்டார். அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சினேகாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் சினேகாவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, மைக்கேல் மதன் சிங் சினேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், இன்று அடித்து கொலை செய்து விட்டார் என்றும் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனை அடுத்து போலீசார் மைக்கேல் மதன் சிங்கை காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து சினேகாவின் உறவினர் மற்றும் தாய் – தந்தையிடம் விசாரணை நடத்தினார். சினேகாவின் உடலில் வேறு எங்கும் காயங்கள் இல்லை. கழுத்தில் மட்டுமே தூக்குப்போட்ட காயம் இருந்தது.
இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சினேகா செல்போன் உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது கணவர் கொலை செய்ததாரா ? என்பது குறித்து பணகுடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.