
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்த பிரிட்டனின் ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை பெரும் தொகைக்கு முகேஷ் அம்பானி வாங்கினார்.
இந்த நிறுவனத்தை இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் விரிவாக்கம் செய்தார். இதே காலகட்டத்தில் தான் மத்திய அரசு, இந்தியா பொம்மை உற்பத்தி ஹப் ஆக மாற வேண்டும் எனத் திட்டத்தை முன்வைத்தது.
ஹாம்லேஸ் பொம்மைகளையும், தயாரிப்புகளையும் இந்தியாவில் விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ரோவன் என்ற தனி பிராண்டை உருவாக்கியது. இந்த நிலையில், ஹாம்லேஸ் பிராண்டை இயக்கும் நிறுவனமாக இந்த ரோவன் தற்போது அடுத்தக்கட்ட வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக புதிய விற்பனை கடையாகவே மாற உள்ளது.
ஹாம்லேஸ்-க்கு பின்னால் இயங்கி வந்த ரோவன் இனி வர்த்தகச் சந்தையில் நேரடியாக இயங்க உள்ளது. ஹாம்லேஸ் போல் அல்லாமல் ரோவன் பொம்மை கடைகள் சிறியதாகவும், அதிகமாகவும், இந்தியா முழுவதும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரோவன் பிராண்டின் முதல் கடை ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் சுமார் 1400 சதுரடியில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.