ரஜினியை சந்தித்த லாரன்ஸ்… பிறந்தநாளுக்கு அன்னதானம்

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குநர் மட்டுமின்றி நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்திருப்பவர். இவர் இயக்கிய காஞ்சனா வரிசை படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. பாலிவுட்டிலும் அதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். தற்போது அவர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2வில் நடித்துவருகிறார். சினிமாவில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் பலருக்கும் பல உதவிகளை செய்துவருகிறார். அவரது செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அவர் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான அவர் பிறந்தநாளையொட்டி ரஜினியை சந்தித்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றார்.

அவருடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “எனது பிறந்தநாளில் தலைவர் மற்றும் குருவிடம் ஆசீர்வாதம் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்ய முடிவு செய்கிறேன்.

இந்த ஆண்டு நான் பசியின் மதிப்பை அறிந்து அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். பல இடங்களுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன். எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன். எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன். உதவி கேட்பதற்காக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை, அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இனி நான் உதவி செய்தால் நான்தான் அவர்கள் காலில் விழுவேன்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.