மாஸ்கோ, ரஷ்யாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உடல் கருகி பலியாகினர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து, 340 கி.மீ., தொலைவில் உள்ளது கோஸ்ட்ரோமா என்ற நகரம். இங்கு மக்களின் பொழுது போக்கிற்காக ஏராளமான இரவு விடுதிகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், இங்குள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் தாக்கினர்.
இவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அதில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக இரவு விடுதியின் மேற்கூரையில் திடீரென தீப்பற்றியது.
இந்த தீ மளமளவென இரவு விடுதி முழுதும் வேகமாக பரவியது. புகை மண்டலம் சூழ்ந்ததால், வெளியேற முடியாமல் பலர் உள்ளே சிக்கினர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, 200க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், 15 பேர், தீயில் கருகி பலியாகினர்; மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோஸ்ட்ரோமா கவர்னர் செர்ஜி ஸ்டினிக்னோவ் கூறுகையில், ”விபத்துக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சி நடக்கிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement