‘காரணம் கண்டுபிடிப்பதில் திமுக அமைச்சர்கள் விஞ்ஞானிகள்’ – ஆர்பி உதயகுமார் விமர்சனம்

அனைத்து விதமான பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்த திமுக அரசு காரணம் கண்டுபிடித்துவிட்டது என்றும், காரணம் கண்டுபிடிப்பதில் அமைச்சர்கள் விஞ்ஞானிகளாக உள்ளனர் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கத்தில், அதிமுக சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இன்றைக்கு தமிழகமே தத்தளித்து கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு நாள் மழைக்கே மழைநீரை வெளியேற்ற முடியாமல் அரசு தத்தளிக்கிறது.
தமிழகம் என்கிற செய்தியே இன்றைக்கு இந்திய அளவில் ஒரு பரபரப்பு செய்தியாக உண்மை செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எப்பொழுதும் போல பச்சை பொய் பேசுகிற அமைச்சர்கள் இப்போதும் பச்சை பொய் பேசுகிறார்கள். சொத்துவரி உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு பச்சை பொய் பேசுகிறார். மின் கட்டண உயர்வால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சை பொய் பேசுகிறார்.
நேற்று ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் 12 ரூபாய் விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்காது என்று அமைச்சர் நாசர் பச்சை பொய் பேசுகிறார். தேர்தல் அறிக்கையில் பால் விலையை மூன்று ரூபாய் குறைப்போம் என்று கண் துடைப்பு நாடகத்தை நடத்திவிட்டு தற்போது மக்களை ஏமாற்றி உள்ளனர். பால் கொள்முதல் செய்பவர்களுக்கு விலை உயர்த்தப்படவில்லை; விற்பனையாளருக்கு கமிஷனும் உயர்த்தப்படவில்லை. அடுத்தடுத்து பச்சை, ப்ளூ பாக்கெட் உள்ளிட்ட அனைத்து பால் பாக்கெட் விலையை காரணம் காட்டி உயர்த்தி விடுவார்கள்.
image
ஒருநாள் மழைக்கே தமிழகம் தத்தளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை கொடுத்தார். இதற்கு முதலமைச்சர் கடந்த 10 ஆண்டுகளாக நிலைமையை சரி செய்யவில்லை அதற்காக முயற்சி எடுக்கிறோம் என்று பதில் அறிக்கை கொடுக்கிறார்.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் வெள்ள தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்களில் மழை வடிகால் பணியினை இன்றைக்கு சிறப்பு அதிகாரிகளாக உள்ள ககன்தீப்சிங் பேடி, அமுதா, ராதாகிருஷ்ணன் போன்ற திறமை வாய்ந்த அதிகாரிகளை வைத்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த 18 மாதகால ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது மட்டுமல்லாது ஐந்து முறை திமுகவில் ஆட்சி பீடத்தில், சிங்கார சென்னையின் மேயராக தற்போதைய முதலமைச்சர் இருந்துள்ளார். அப்போது இவரால் வெள்ள தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதற்காக திட்டங்கள் நிதி எதுவும் வெளியிடப்பட்டதா? என்பதை அவர் வெளியிட தயாரா?
இன்றைக்கு அத்தனை அமைச்சர்களும் பச்சை பொய்யாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதை போல, எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று அனைத்து அமைச்சர்களும் பச்சைபொய் பேசுகிறார்கள். சொத்து வரி உயர்வுக்கு அண்டை மாநிலங்களை பாருங்க, பக்கத்து மாநிலத்தில் பாருங்க என்று கூறினார்கள். பால் விலை உயர்வுக்கு பால்வளத்துறை அமைச்சர் குஜராத்தை பாருங்க என்று கூறுகிறார். 
image
தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்றி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள அரசு மறுக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தாண்டி பயங்கரவாதம் வேரூன்றியதற்கு கோவை சம்பவம் சாட்சியமாக உள்ளது. கோவையில் பயங்கரவாதம் நடந்திருப்பதை ஏற்கவே அரசு தயங்குவது ஏன்?.
தூத்துக்குடி விவகாரத்தில் தோழமைக் கட்சிகளை பேசவிட்டு முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது முதல்வர் பதவிக்கு அழகல்ல. அவர் பொதுவான நபராக இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி நிரந்தரமானது இல்லை. அது அவரின் சொத்தும் இல்லை. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்னாள் முதல்வரை எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரே ஆட்சி காலத்தில் இரண்டு முறை விவசாய கடனை ரத்து செய்தது அதிமுக அரசுதான். ஆனால் இன்று விவசாய கடன் தள்ளுபடி என கேட்டால் பல்வேறு காரணங்களை திமுகவினர் கூறி வருகின்றனர். நீர் மேலாண்மையில் மழை நீர் சேகரிப்பு, குடிமராமத்து என பல்வேறு சிறந்த திட்டங்களை அதிமுக அமல்படுத்தியது. அதனை பாரத பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு என திமுக அரசு எதையும் செய்யவில்லை.
image
அதிமுக மீது அவதூறு பரப்பும் வேலையை தான் திமுகவினர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணத்தை கையில் வைத்து இருப்பதில் திமுக அமைச்சர்கள் விஞ்ஞானியாக இருக்கிறார்கள். மதுரை பெண்கள் கல்லூரி வளாக முன்பாக வன்முறை வெறியாட்டம் நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. எனக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர், நெஞ்சம் பதைபதைக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.