கோவை: கோவையில் கார் வெடி விபத்தில் உயிரிழந்த முபினின் நடவடிக்கையால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் வரவில்லை என அவரது மாமனார் தெரிவித்தார். கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த, அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். ஜமேஷா முபின் இன்ஜினீயரிங் பட்டதாரி. அவருக்கு நஸ்ரத் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
தொடக்கத்தில் பழைய புத்தகக்கடையில் வேலை செய்து வந்த இவர், பின்னர் பழைய துணிகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முபினின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். முபின் எந்த ஜமாத்திலும் உறுப்பினராக இல்லை. அதேபோல், தொழுகைக்கு மற்றவர்கள் சென்று வந்த பின்னர், முபின் தனியாக சென்று வந்துள்ளார். இதுதொடர்பாக கேள்வி எழுந்தவுடன் அங்கு செல்வதையும் நிறுத்திவிட்டு, வீட்டிலேயே தொழுகை நடத்திஉள்ளார்.
யாரிடமும் அதிகம் பேசாத முபின், சம்பவம் நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று உக்கடம் அல்-அமீன் காலனி 3-வது வீதியில் உள்ள மாமனார் ஹனீபா வீட்டில் விட்டு வந்துள்ளார். மேலும், மகள்கள் மீது முபின் அதிக பாசம் வைத்திருந்தார். வீட்டிலிருந்த பெட்டி தொடர்பாக மனைவி கேட்ட போது, அதில் துணி இருப்பதாக முபின் தெரிவித்துள்ளார். கடந்த 21-ம் தேதி மாமனார் வீட்டுக்குச் சென்ற முபின், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து நேரத்தை செலவிட்டுள்ளார். மனைவியுடன் வாட்ஸ் அப் சாட் மூலமே அதிகம் பேசிவந்துள்ளார். இந்தச் சூழலில் முபினின் தீவிரவாதம் சார்ந்த நடவடிக்கைகள் அவரது குடும்பத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முபினின் மாமனார் ஹனிபா கூறும்போது, ‘‘எனது 2-வது மகள் நஸ்ரத். அவர் காது கேட்காத வாய் பேச முடியாத பெண். அவருக்கு மாப்பிள்ளை தேடியபோது முபினின் அறிமுகம் கிடைத்தது. எனது மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டார். முதலில் மறுத்த நான் பின்னர் அவர் வற்புறுத்தி கேட்டதால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்தேன். திருமணத்துக்கு பிறகு நாங்கள் எங்களது மேற்பார்வையில் முபினையும், மகளையும் தங்க வைத்துபார்த்து வந்தோம். முபினுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. கிடைக்கும் தொகையைக் கொண்டு அன்றைய தினத்துக்கான தேவையைப் பூர்த்தி செய்து கொள்வார். ரேஷன் அரிசி பொருட்களை பயன்படுத்தி வந்தார். எங்களது பார்வையில் அவர் தவறான நபர் இல்லை. தொலைக்காட்சி மூலமே அவர் குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரிந்தது.
கடந்த 21-ம் தேதி வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்த முபின், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுச் சென்றார். மேலும், முபின் கேட்டவுடன் பதில் கூற மாட்டார். 4 முறை கேட்டால் தான் ஒருமுறை பேசக்கூடிய சுபாவம் உடையவர். அவர் வாங்கி வைத்திருந்த பொருட்களின் விவரம் மகளுக்கு தெரியாது. வீடு மாற்றும் போது, பெட்டிகள் வைத்திருந்தார். அப்போது வீட்டின்உரிமையாளர் கேட்ட போது, அதில் புத்தகங்கள் இருந்தது என்றார். இருப்பினும், சந்தேகத்தின் பேரில்வீட்டு உரிமையாளர் 2 பெட்டிகளை பிரித்து பார்த்தார். அதில் புத்தகங்கள் இருந்ததால் மற்ற பெட்டிகளை பிரிக்கவில்லை. அவர் வைத்திருந்த பொருட்களை நாங்கள் பார்த்ததே இல்லை. அவரை பார்க்க நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வருவர். அப்போது மனைவியை மற்றொரு அறைக்கு அனுப்பி விடுவார். இதனால் யார் வந்து செல்கின்றனர் என எனது மகளுக்கு தெரியாது. முபினின் நடவடிக்கையால் கடைசி வரை அவர் மீது எங்களுக்கு சந்தேகம் வரவில்லை’’ என்றார்.