தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த பரந்தூர் விமான நிலையம் அமைவது கட்டாயம்: அரசு விளக்கம்

சென்னை: தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நடவடிக்கையாக தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஈடுபட்டுள்ளன. இ்ந்நிலையில், விமான நிலையம் அமையும் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு பல்வேறு விளக்கங்கள் அளித்தும், கிராம மக்கள் எதிர்ப்பு குறையவில்லை.

இந்நிலையில் விமான நிலையத்தின் அவசியம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த, வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் தலைநகரில் 2-வது விமான நிலையம் அவசியமாகிறது. கடந்த 24 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போதுதான் இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, பரந்தூரில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம்ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலைய திட்டத்துக்கு ரூ.100 செலவழித்தால், மாநிலத்துக்கு வருமானமாக ரூ. 325 கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) பிரதிநிதிகளும் 2-வது விமான நிலையம் அவசியம் என தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கான வாய்ப்புகளை பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் தட்டிப்பறித்துள்ளன. சென்னை விமான நிலையம் பின்தங்கியதற்கு புதிய விமான நிலையத்தை உருவாக்காததே காரணமாகும். ஏற்கெனவே உள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த போதிய நிலம் இல்லை.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் 6-வது இடத்தில் சென்னை விமான நிலையம் உள்ளது. அதிகரிக்கும் பயணிகள் பயணிகள் போக்குவரத்தை கையாள இந்த விமான நிலையம் போதுமானதாக நிச்சயம் இருக்காது. புதிதாக திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களை தரையிறக்க முடியும். 600 பயணிகள் பயணிக்கும் பெரிய ரக விமான நிலையங்களை கையொளும் திறன் பெறும்போது, சர்வதேச பயணிகள் வரத்து அதிகரிக்கும். நேரடியாக வெளிநாட்டு பயணிகள் சென்னை வந்திறங்க முடியும்.

மெட்ரோ ரயில் தடம் விரிவுபடுத்தப்படுவதன் மூலம் பரந்தூர்- சென்னை பயண நேரம் குறையும். இவற்றுக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும் போது, வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள விமான நிலைய திட்டத்துக்கு ரூ.100 செலவழித்தால், மாநிலத்துக்கு ரூ.325 வருவாய் கிடைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.