பண்ணை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தாய், தந்தை, 2 மகன்கள் கோடாரியால் வெட்டிக் கொலை: தண்ணீர் தொட்டியில் விழுந்து போதை விவசாயி தற்கொலை

ஜோத்பூர்: ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, 2 மகன்களை கோடாரியால் வெட்டிக் கொன்ற போதை விவசாயி, தானும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் லோஹாவத் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் லால் (38). இவர் தனது தந்தை (60), தாய் சம்பா (55), மனைவி மற்றும் மகன்கள் லட்சுமணன் (14), தினேஷ் (6) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை, தாய் சம்பா, மகன்கள் லட்சுமணன், தினேஷ் ஆகியோரை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களின் சடலத்தை தண்ணீர் தொட்டியில் வீசினார். பின்னர், தானும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் 5 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் குறித்து லோஹாவத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரி பிரசாத் கூறுகையில், ‘கொலையாளி சங்கர் லார், மது, அபின் போதைக்கு அடிமையானவர்; போதையில் வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வருவது வழக்கம். அவரது பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்றார். அதன்பிறகு, அவர் தனது வீட்டிற்குச் சென்றார்; வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தனது தாயையும், மூத்த மகனையும் கொன்றார். தொடர்ந்து தனது மனைவியின் அருகில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த இளைய மகனை வெளியே கொண்டு வந்து, கோடாரியால் வெட்டிக் கொன்றார்.

பின்னர் நான்கு பேரின் சடலங்களையும் தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றார். பின்னர் தனது உறவினர் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த போது, சங்கர் லாலின் மனைவி மற்றும் அவரது சகோதரரின் குடும்பத்தினரும் வீட்டில் இருந்தனர். ஆனால் அவர்கள் எவரையும் சங்கர் லால் கொல்லவில்லை. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து வருகின்றனர்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.