பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தமிழக அரசு இப்படியொரு அறிவிப்பு!

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறை இயக்குனர் வீரராகவ ராவ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம், 214 தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன.

முகாமை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்தாலும், மாணவர்கள் நலன் கருதி தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அது மட்டுமல்லாமல், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை. தமிழகத்திற்கு தேசியக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு வேண்டாம் என்று பிரதமரிடமே கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால், ‘தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு சிறப்பாக பின்பற்றுகிறது’ என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் தமிழகத்திற்கு வந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மழைக் காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மதுரையில் நேற்று கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒழுகும் பள்ளிக் கட்டடங்கள், ஊறிப்போன சுற்றுச்சுவர்கள், மின் இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்க வலியுறுத்தி உள்ளோம். மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.